வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-10 18:45 GMT

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

அலுவலர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 பேர் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து பணியின் போது இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை 100 சதவீதம் இணைத்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

தயார்

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, "வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைக்கால நோய்களில் மக்களை காக்க தேவையான மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வே.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீரபத்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்