ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்ததால்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் மழை பெய்ததால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

Update: 2023-01-24 18:45 GMT

கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா இடமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவர்கள் அருவியில் உற்சாகமாய் குளியல் போட்டு அருகே உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹைவேவிஸ் மற்றும் சுருளி மலைப்பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக நேற்று காலை அருவியில் திடீரென வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதுகுறித்து கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி கூறுகையில், அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்