3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.55 லட்சம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல்லில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கும் நிலையில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
பென்னாகரம்:
அணைகளில் தண்ணீர் திறப்பு
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 52 ஆயிரத்து 465 கனஅடி தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர்வரத்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்து அடைகிறது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றம்பாளையம், பிலி குண்டுலு, கேரட்டி பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
நீர்வரத்து குறைந்தது
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணிக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
இருப்பினும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் என எதிா்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் வினாடிக்கு 1½ லட்சம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் வரத்து உள்ளதால், ஆலம்பாடி காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒகேனக்கல்லில் அருவிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பரிசல் இயக்க தடை
இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
காவிரி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.