ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-10-28 21:45 GMT

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

வேளாண் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

பயிர் காப்பீடு செய்தாலும், பிர்கா அளவில் பயிர்கள் அழிந்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் என்பதை மாற்றி, தனி நபர் பயிர் காப்பீடாக்க வேண்டும். மரவள்ளி பயிரில் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளது. சேகோ ஆலைகள், ஜவ்வரிசியில் மக்காசோளம், ரேஷன் அரிசி போன்றவற்றை கலப்பதால், மரவள்ளிக்கு விலை இல்லை. குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். கூட்டுறவு மூலம் வழங்கப்படும் பயிர் கடனை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்.

பூச்சி கொல்லி மருந்து

கரும்பு, நெல், கோதுமைக்கு விலை நிர்ணயிப்பதுபோல, மஞ்சளுக்கும் விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். உரம், பூச்சி கொல்லி மருந்து போன்றவற்றை மலை பகுதிகளில் பயன்படுத்தினால், நிலவளம், விலங்குகள், சிறிய உயிரினங்கள் கூட அழியும். எனவே அவற்றை கண்காணிக்க வேண்டும்.

கோபி, வெள்ளாளபாளையம் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், புதுக்கரைபுதூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற வேண்டும் என மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். அந்தியூர் மலையில் பூர்வ நில குடியேற்ற சங்கத்தின் சார்பில், 1942-ம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் 2 முதல், 5 ஏக்கர் நிலம் வழங்கினர். தற்போது பல வாரிசுதாரர்களாகிவிட்டதால் முறையாக அவர்களுக்கு அந்த நிலத்தை பிரித்து வழங்க வேண்டும்.

பால் கொள்முதல்

அரசின் ஆதார விலை திட்டத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை செய்கின்றனர். வருகிற 31-ந்தேதியுடன் கொள்முதலை நிறுத்தாமல் மேலும் சில மாதம் நீட்டிக்க வேண்டும். நெல், கரும்புக்கு ஆண்டு தோறும் விலையை உயர்த்தி நிர்ணயிப்பதுபோல், பாலுக்கும் நிர்ணயிக்க வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டுக்கு பின்னர் விலை உயராததால், ஆவினுக்கு பால் வழங்க மறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும். ஒழுங்கு முறை விற்பனை கூடம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 4 இடத்தில் மஞ்சள் ஏலம் நடப்பதால் குவிண்டால் ரூ.6 ஆயிரத்துக்கு மேல் உயரவில்லை. எனவே ஒரே இடத்தில் மஞ்சள் ஏலத்தை நடத்தி இடெண்டர் முறையை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர்.

அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்து பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்