ஆறுமுகநேரியில் தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து ரகளை; வாலிபர் கைது
ஆறுமுகநேரியில் தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பாரதி நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் முருகன் (வயது 60). தொழிலாளி. பெயிண்டிங் வேலையும் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், வீட்டிற்கு முன்பு குடும்பத்தினருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த அதே பகுதியைச் சேர்ந்த சூரியசேகர்(38) என்பவர், மதுபோதையில் முருகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து படுக்க முயன்றுள்ளார். இதை கண்டித்த முருகன் குடும்பத்தினருடன் சூரியகுமார் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த சிங்கமுத்து, ஐக்கோட்டு ஆகிய 2 பேரும் சேர்ந்து முருகன் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். திடீரென்று அந்த 3 ேபரும் முருகன் வீட்டுக்குள் நுழைந்து கட்டிட வேலைக்காக வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து தாக்க முயற்சித்துள்ளனர். அவரது குடும்பத்தினருடன் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால், முருகன் குடும்பத்தினருக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து சூரியசேகரை கைது செய்தார். தலைமறைவாக உள்ள மற்ற 2பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.