சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா

அணைக்கட்டு, திருவலம், கே.வி.குப்பம் பகுதி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

Update: 2023-01-06 17:27 GMT

அணைக்கட்டு

அணைக்கட்டு பகுதியில் உள்ள விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில், பாக்கம் கைலாசநாதர் கோவில், வெட்டுவாணம் ஆனந்தவல்லி சுந்தரேஸ்வரர் மற்றும் அகரம் சேரி திரிபுரசுந்தரி மார்க்கபந்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

விழாவையொட்டி சிறப்பு யாக சாலை பூஜைகள், பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதனை அடுத்து நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய திருவீதிகளில் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கே.வி.குப்பம்

லத்தேரியில் உள்ள பருவதர்ஷினி உடனுறை ராமநாதேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணி அளவில் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. உற்சவ மூர்த்தி அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திருவாசகம் பாடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் மகாதேவ மலையில் ஆருத்ரா சிறப்பு தரிசன விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி மகாதேவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீப ஆராதனை நடைபெற்றது. உற்சவ மூர்த்தி நடராஜர் அலங்கரிக்கப்பட்டு கிரிவலமாக பக்தர்கள் கொண்டு சென்றனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

திருவலம்

காட்பாடி தாலுகா திருவலம் நீவா நதிக்கரை ஓரம் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான தனுமந்தியம்மாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை முதலே சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 6 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்து. பின்னர் கைலாய வாத்திய இசை முழங்க தனுமந்தியம்மாள் சமேத வில்வநாதீஸ்வரர் சுவாமி மாட வீதி வழியாக திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பொன்னை பகுதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான காமாட்சியம்மன் சமேத மஹாதீஷ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையோட்டி அதிகாலை 4 மணி முதல் சிறப்பு பழங்கள், விசேஷ திரவியங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 8 மணியளவில் கைலாய வாத்திய இசை முழங்க காமாட்சியம்மன் சமேத மஹாதீஷ்வரர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்