நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா திருநடனக்காட்சி

திருவாதிரை திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா திருநடன காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-06 20:07 GMT

திருவாதிரை திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா திருநடன காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில்

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில், நடைபெறுகின்ற விழாவில் மிகவும் பிரசித்தி பெற்ற விழா திருவாதிரை திருவிழாவாகும்.

இந்த விழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெண்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடத்தப்பட்டது.

ஆருத்ரா தரிசனம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதற்காக தாமிரசபை மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு சுவாமி நடராஜபெருமான் எழுந்தருளிய நிலையில், அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விடிய விடிய சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, நடன தீபாராதனை நடைபெற்றது.

இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் விடிய, விடிய கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதனை காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பசு தீபாராதனையும், 4 மணிக்கு நடராஜ பெருமானின் திருநடனக்காட்சியான ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

செப்பறை

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு கோ-பூஜையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனையும், 3 மணிக்கு அழகியகூத்தர் வீதிஉலாவும் நடைபெற்றது.

மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் கோமதிஅம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடராஜர் அபிஷேகம், கோ பூஜை, சோடஷ தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் நடந்தது. 10 மணிக்கு நடராஜர் சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சப்பர வீதி உலா நடந்தது.

நெல்லை கொக்கிரகுளம் சிவன் கோவிலில் உள்ள நடராஜருக்கு திருவாதிரை திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

அம்பை

அம்பை காசிநாத சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட 36 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும், அதைத் தொடர்ந்து ஆருத்ரா தரிசனம், கோ பூஜை, தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் நடராஜர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக அம்மையப்பர் கோவில் வந்தடைந்து அங்கு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல் அம்பை அகஸ்தீஸ்வரர் கோவில் மற்றும் மயிலானந்த சுவாமி கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

வள்ளியூர்

இதேபோல் வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சீதமாமுனீஸ்வரர் கோவில், திசையன்விளை செல்வ மருதூர் சேர சோழ பாண்டிஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்