கலைஞர் மகளிர் உரிமை திட்ட முன்னேற்பாடு பணிகள்
கடலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் குமார் ஜெயந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கடலூர்
மகளிர் உரிமை திட்டம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1416 ரேஷன் கடைகளில் உள்ள 7.8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பம், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் நேரடியாக வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 20-ந்தேதி முதல் வீடு, வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் குறித்த விவரமும் டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்ட முன்னேற்பாடு பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கடலூர் வந்தார்.
தொடர்ந்து அவர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் கடலூர் வன்னியர்பாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முகாமில், பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்களை பதிவு செய்யும் வழிமுறைகள் குறித்து தன்னார்வலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர் களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பொதுமக்களிடம் உரிய விவரங்களை கேட்டு, விடுபடாமல் பதிவு செய்ய அறிவுறுத்தினார்.
ஆதார் அட்டை
தொடர்ந்து அவர் கூறுகையில், விண்ணப்ப பதிவு முகாமுக்கு குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இயலும். மேலும் விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்றார்.
இந்த விண்ணப்ப பதிவு காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடக்கிறது. விண்ணப்ப பதிவு முகாம்களில் ஊழியர்கள் நேற்று மாதிரி பதிவு செய்து சரிபார்த்தனர். முன்னதாக கடலூர் தாலுகா அலுவலகத்தில் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் குமார் ஜெயந்த், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் வருவாய்த்துறை மூலம் மேற்கொள்ளப்படும் இணைய வழி செயல்பாடுகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான மதுபாலன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.