"கலைஞர்100-விகடனும் கலைஞரும்'' நூல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

விகடன் பிரசுரம் சார்பில் ‘‘கலைஞர்100-விகடனும் கலைஞரும்'' என்ற நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

Update: 2023-09-21 00:20 GMT

சென்னை,

விகடன் பிரசுரம் சார்பில் ''கலைஞர்100-விகடனும் கலைஞரும்'' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலின் முதல் பிரதியை வெளியிட்டார். அதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் தி இந்து குழுமத்தின் இயக்குனர் என்.ராம், தினமலர் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர்கள், மேயர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கலைஞரின் டைரி

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞர் நூற்றாண்டு விழாவை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கொண்டாடி ஆக வேண்டும். பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் ஆளுமை, திரையுலக கதை வசன கர்த்தா, நாடக நடிகர், சின்னத்திரை வசன கர்த்தா என பன்முக ஆற்றல் கொண்டவர் என்பதால் அவரை அவர்கள் அனைவரும் போற்றுவது பொருத்தமான ஒன்று. அப்படிப்பட்ட கடமையை தான் மறக்காமல், மறுக்காமல் ஆனந்த விகடன் இன்று நிறைவேற்றியுள்ளது.

இந்த நூல் கலைஞர் பற்றிய கருவூலமாக இருக்கிறது. இதை படிக்கும் போது கலைஞரின் வாழ்க்கையோடு, நாம் பயணிப்பதை போலவே அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது கலைஞரின் டைரி என்றே சொல்லலாம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும், கலைஞர் எடுத்த நிலைப்பாடுகளை இந்த நூலில் நாம் தெரிந்து கொள்ள முடியும். கலைஞருடைய உழைப்பு, அறிவு, ஆற்றல் பற்றி தெரிந்து கொள்வதற்கு கருவூலமாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இந்த 50 ஆண்டுகாலத்தில் கலைஞரை பற்றிய 108 பதிவுகள் இதில் இடம் பெற்றிருக்கிறது.

நடுநிலை பத்திரிகை

பத்திரிக்கைகள் ஒரு ஆட்சி செயல்படுத்தி வருகிற நல்ல திட்டங்களை மனப்பூர்வமாக ஆதரித்து எழுதினால்தான், நீங்கள் விமர்சிக்கும்போதும், அதற்கு உண்மையான மதிப்பும், மரியாதையும் இருக்கும். சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலையான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்படவேண்டும் என்று மிகுந்த பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனென்றால், இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால், அதுமட்டும் போதாது. ஜனநாயகத்தினுடைய நான்காவது தூணாக இருப்பது, போற்றப்படுவது, பத்திரிகைகள்தான். எனவே, தங்களுடைய கடமையை நீங்கள்செய்யவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நெருக்கடி

மணிப்பூரில் உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக 'எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்றார்கள். சென்றுவிட்டு அந்த அறிக்கையையும் கொடுத்தார்கள். அப்படி அறிக்கை கொடுத்தவர்கள் மீதே மணிப்பூர் அரசு வழக்கு போட்டிருக்கிறது. எடிட்டர்ஸ் கில்டு அமைப்புக்கே இந்த நிலைமை என்றால், யோசித்துப் பார்க்கவேண்டும். சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி கடுமையாக இதை கண்டித்திருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்ற இந்த நேரத்தில், ஜனநாயகம் காக்க, அதன் மூலமாக இந்தியாவை காக்க வேண்டிய கடமை என்பது நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகைகளிடம்தான் இருக்கிறது. ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிக்கைத்துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும் என்பது என்னுடைய அக்கறையுள்ள வேண்டுகோளாக நான் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

'எக்ஸ்பிரஸ்' வேகம்

முன்னதாக விழாவில், கமல்ஹாசன் பேசுகையில், 'தமிழுக்கு கலைஞர் ஆற்றிய பங்கு அளப்பரியது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் திரைக்கதை எழுதும் கலைஞர். என்னை மாதிரி பல நடிகர்களுக்கு கலைஞர்தான் 'கேட்பாஸ்'. வாய்சுத்தம் பார்ப்பதே கலைஞரின் வசனத்தை வைத்துதான். அதேபோல இறுக்கமான சூழலையும் இளக செய்யும் நகைச்சுவை உணர்வு மிக்கவர். 1983-ம் ஆண்டில் 'தி.மு.க.வில் நீ ஏன் இன்னும் சேரவில்லை?', என்று எனக்கு தந்தி அனுப்பியிருந்தார். இதற்கு பதில்சொல்ல முடியாத பயம், தயக்கத்தில் எதுவுமே சொல்லாமல் அமைதி காத்துவிட்டேன். அதை புரிந்து கொண்டு அவர் அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தார். என் மனநிலை ஓட்டத்தை கணித்தும் விட்டார்' என்றார்.

கருவூலம்

விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன் பேசுகையில், 'எழுத்தையும், பேச்சையும் மூச்சாக கருதிய கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில், கலைஞர் கருவூலம் போல இந்த நூலை வெளியிடுவதை விகடன் தன்னுடைய பெருமைக்குரிய பங்களிப்பாக கருதுகிறது. கலைஞரின் அரசியல் முகம், கலைமுகம், இலக்கிய முகம் என்று பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் தொகுப்புதான் இந்த நூல். தமிழை வாசிக்க தெரிந்த அத்தனை பேரிடமும் இந்த நூலை கொண்டு சேர்க்கும் முயற்சியை ஆனந்த விகடன் நிறுவனம் எடுக்கும். அதற்கு முதல்-அமைச்சரும் துணை நிற்கவேண்டும்' என்றார்.

விழாவின் இறுதியில் ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்