டுவிட்டரில் திடீரென டிரண்டாகும் சட்டப்பிரிவு 356...! கூறுவது என்ன...?

அரசியலமைப்பு சட்டம் 356 என்ற டேக் இணையத்தில் தீவிரமாக டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Update: 2023-01-10 07:18 GMT

சென்னை,

சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் உள்ள சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபையில் தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் இந்த நாட்டையே கவர்னர் ஆர்.என்.ரவி அவமானப்படுத்திவிட்டார் என்று சபாநாயகர் அப்பாவு வேதனை தெரிவித்தார்.

கவர்னர் அரசு எழுதி கொடுத்த உரையை முழுமையாக படிக்காததை அறிந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் "அரசு தயாரித்த உரையை கவர்னர் முழுமையாக படிக்கவில்லை. அவர் அவ்வாறு படிக்காதது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றார்.

இதற்கிடையில், கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கவர்னருக்கு ஆதரவாக 'ஆளுநரின் ஆளுமையே' என பாஜகவினர் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், அரசியலமைப்பு சட்டம் 356 என்ற டேக் இணையத்தில் தீவிரமாக டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. தேசிய அளவில் தற்போது இந்த டேக் டிரெண்டாகி உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 356, இது கவர்னரின் பரிந்துரைப்படி, ஜனாதிபதி மாநில அரசுகளை கலைக்கும் அதிகாரத்தையும், அதனை தொடர்ந்து கலைக்கப்பட்ட அந்த அரசுக்கு பதிலாக ஜனாதிபதி ஆட்சியை அந்த மாநிலத்தில் நியமித்து ,ஜனாதிபதி ஆலோசனைபடி அந்த கலைக்கப்பட்ட மாநிலத்தின் கவர்னர் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறது.

நடைமுறைப்படி கூறவேண்டும் என்றால் ஜனாதிபதி ஆட்சி என்பது ஒரு மாநில அரசை கலைத்து மத்திய அரசு நேரடியாக கவர்னர் மூலம் அந்த மாநிலத்தை ஆளுவதே ஆகும். அதாவது, எப்போதெல்லாம் மாநில அரசு இயந்திரம் பழுதடைந்தது என்று நினைக்கிறார்களோ, அப்போதெல்லாம் அதன் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், அதாவது ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை நிறுவி, அதன் பிறகு, ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது. மேலும் இந்த ஆறு மாதம் என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஒவ்வொரு ஆறு மாதம் என்று மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம்.

356 பிரிவின்படி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஒரு நியமன ஒருங்கிணைப்பாளரான கவர்னரின் அறிக்கையை பெற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் ஜனாதிபதி கலைக்கிறார். இதில் ஒரு விஷயத்தை மிக தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், கவர்னர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர், அதனால் அவரது அனைத்து நடவடிக்கைகளும் மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும் என்பதே யதார்த்தம். அதற்கு உதாரணம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1966 லிருந்து 1977வரை அரசியலமைப்பு சட்டம் 356 பயன்படுத்தப்பட்டு வெவ்வேறு மாநில அரசுகள் கலைக்கப்பட்டது.

ஜூன் 1951 இல் பஞ்சாப் அரசு அரசியலமைப்பு சட்டம் 356 பயன்படுத்தப்பட்டு முதன்முதலாக கலைக்கப்பட்டது, அப்போது முதல் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட முறை மாநில அரசுகள் கலைக்கப் பட்டுள்ளன. இதுவரை நடந்த ஆட்சி கலைப்புகள் பெரும்பாலும் மத்திய அரசின் ஒப்புதலுடன் நடந்தவையே. இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசின் ஆட்சி கலைப்பிலிருந்து தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைத் தவிர தப்பாத மாநிலங்களே இல்லை என்றே கூறலாம். நமது தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆம், தமிழ்நாடு சட்டமன்றம் இதுவரை நான்கு முறை 356 சட்ட படி மத்திய அரசின் ஆட்சி கலைப்பால் காவு வாங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்