ராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் நெல்லை மண்டல அளவிலான கலை இலக்கிய போட்டிகள் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டிகளை லிட்டில் பிளவர் கல்வி குழும தலைவர் மரியசூசை தொடங்கி வைத்தார். நடுவர்களாக பேராசிரியர் சங்கர வீரபத்திரன், கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி உள்ளிட்டோர் செயல்பட்டனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், காரைக்குடி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 441 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை உள்பட 4 பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகள் முடிவடைந்து மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். ராமலிங்கர் பணி மன்ற பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி பேசினார்.
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். முடிவில் கவிஞர் பிரபு நன்றி கூறினார். இதில் கவிஞர்கள் பாமணி, ஜெயபாலன், முத்துசாமி, பிரபு, சக்தி வேலாயுதம், பேராசிரியர்கள் பிரேமலதா, தேவி பிரசாத், ஆறுமுக செல்வி, சடகோப நம்பி, சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.