தளி
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி அரசு பள்ளி மாணவர்களிடையே உள்ள கலை, இலக்கிய நடன திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் ஆண்டு தோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகள் முதல் கட்டமாக பள்ளி அளவிலும், 2-ம் கட்டமாக வட்டார அளவிலும், 3-ம் கட்டமாக மாவட்ட அளவிலும், 4-ம் கட்டமாக மாநில அளவிலும் நடத்தப்படுகிறது.
அதன் படி நடப்பு கல்வி ஆண்டுக்கான உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் உடுமலை தளி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்களாக நடைபெற்றது. உடுமலை வட்டாரத்தில் உள்ள ஆறு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து போட்டிகளும் நடைபெற்றது. நிகழ்வுக்கு உடுமலை வட்டார அளவிலான கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், மனோகரன், ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி, விவாத மேடை, களிமண் உருவங்கள் செய்தல், காய்கறி பொம்மைகள் செய்தல், கிராமிய நடனம், தனி நடனம், செவ்வியல் நடனம், இசை வாய்ப்பாட்டு, கட்டுரை போட்டி, கையெழுத்துப் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்ற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர். நிறைவாக கலைத் திருவிழாவின் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்
ராம் பிரசாத் நன்றி கூறினார்.