தர்மபுரி:
பள்ளி கல்வித்துறை சார்பில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் மற்றும் ஒன்றிய அளவில் கலை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நடைபெற்றன. வாய்ப்பாட்டு, நடனம் போட்டிகள், இசைக்கருவிகள் வாசித்தல், நாடகம், மொழி திறன் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கலைத்திறன் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் மொத்தம் 1,861 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜகோபால், ஷாகில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மான்விழி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார், உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா, தலைமை ஆசிரியர்கள் மணிவண்ணன், தெரசாள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் மற்றும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.