தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு தள்ளாடுகிறதா தபால்துறை? மனம் திறக்கிறார்கள் மக்கள்

தனியார் கூரியர் நிறுவனங்கள் வருகை மற்றும் மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பால் தபால் துறை தள்ளாடுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2022-11-07 18:45 GMT

உடல் எங்கும் ஓடுகின்ற ரத்த நாளங்கள் போல், உலகு எங்கும் ஓடிக்கொண்டு இருப்பது, தபால்துறை. அதன் கையில் ஒரு கடிதத்தை ஒப்படைத்துவிட்டால் குறைந்தது 4 நாட்களில் உலகின் எந்த திசையாக இருந்தாலும் ஓடோடிப்போய்ச் சேர்த்துவிடும். அத்தகைய நம்பகத்தன்மை கொண்டது.

தபால்காரர் ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டு கிராமத்து தெருக்களில் வருவார். சில காகிதங்களை கையிலும் பையிலும் வைத்திருப்பார். அவருக்குத்தான் எத்தனை மரியாதை?

கடிதாசுகள்

அன்புள்ள அம்மா, அப்பா நலம் நலமறிய அவா... என்று பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்ற பெற்ற பிள்ளைகள் எழுதிய கடிதாசுகள். அதற்காக நாளும் காத்துக்கிடந்த பெற்றோர்கள்.

அன்பு மனைவிக்கு ஆசையுடன் அத்தான் எழுதிக்கொள்வது என்னவென்றால்... என்று எல்லையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள், ஏக்கங்கொண்ட மனைவியர்களுக்கு எழுதிய மடல்கள்.

அன்புள்ள மான்விழியே... என்று காதலர்கள் வரையும் காதல் கடிதங்களுக்காக காத்திருந்த காதலிகள். அவர்களின் பதில்களை எதிர்நோக்கி பார்த்திருந்த காதலர்கள்.

இப்படி காத்து இருப்பவர்கள் எல்லாம் அந்த பழைய சைக்கிள்காரரைத்தான் தேடி எதிர்பார்த்து இருப்பார்கள்.

அவர் கொண்டுவருவது மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம், சிலநேரங்களில் அதிர்ச்சியான (டெலகிராம்) தகவலாகவும் இருக்கலாம்.

தலைகீழ் மாற்றம்

இப்போது நிலை தலைகீழாகிவிட்டது.

வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் சைக்கிள் இல்லாத தபால்காரர்களாக செயல்பட்டு வருகின்றன.

முன்பு எல்லாம் விழாக்காலங்களில் தபால் பெட்டிகள் வயிறு நிரம்பி, வாய்வழியே வாழ்த்து கடிதங்கள் எட்டிப்பார்க்கும். இப்போது திறந்துபார்த்தால் வறியவர் வயிறு போல் வற்றிப்போய் ஒன்று இரண்டு கடிதங்களே உள்ளே கிடக்கின்றன.

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் தபால்துறைக்கு சவாலாக வளர்ந்துவிட்டன.

இந்த போட்டிகளில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள, தபால் துறையும் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது. அது எப்படி? என்பதை பார்ப்போம்.

தரமான சேவை

இதுபற்றி தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் செல்வகுமார் கூறும்போது, ''தபால் துறைக்கு தனிநபர் கடிதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வரும் வாழ்த்து அட்டைகள் குறைந்தாலும் அதற்கு ஈடாக பாஸ்போர்ட்டு, வங்கிச்சேவை, ஆதார் அட்டைக்கான பணிகளை சிறப்பாக அளிக்க தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்'' என்றார்.

''பதிவு தபால் சேவை 5 சதவீதமும், விரைவு தபால் சேவை 15 சதவீதமும் அத்துடன் வணிக நிறுவனத் தபால்களும் அதிகரித்துள்ளன. மாநிலம் முழுவதும் 1,459 தபால் துறை மையங்கள் மூலம் கடந்த ஆண்டு 18 லட்சம் ஆதார் அட்டைக்கான பயன்பாட்டு பணிகள் நடந்துள்ளன. அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு வரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 564 பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் கையாளப்பட்டன. பொதுமக்களின் மாறாத நம்பிக்கையுடன் அவர்களுக்கு தரமான சேவையை தபால்துறை தொடர்ந்து செய்து வருகிறது'' என்றும் அவர் சொன்னார்.

ஆங்கிலேயர் நடைமுறை

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் ஏ.இஸ்மாயில் கூறியதாவது:-

தபால்துறை பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, இந்திய தபால் பேமென்ட் வங்கி மூலம் டிஜிட்டல் சேவையை பொதுமக்கள் பெற்று வருகிறார்கள். ஆதார் அட்டை, ஆயுள் சான்றிதழ் வழங்குவது, வங்கி, மின்வாரியம், தொலைத் தொடர்புத்துறை தொடர்பான பணிகளையும் தபால் நிலையங்கள் செய்து வருகின்றன.

1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் தபால் நிலையங்களை திறக்கும் போது, கிராமிய தபால் நிலையங்களை புறநிலை தபால் நிலையங்களாக நிர்வகித்தனர். அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் கிளை தபால் நிலையங்களில், 1.26 லட்சம் தபால் அலுவலகங்கள் கிராமங்களில் இருக்கின்றன. சுமார் 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். துறைக்கான மொத்த வருவாயில் 75 சதவீதத்தை அவர்கள் தேடித்தருகிறார்கள். ஆனால் அவர்கள் ஓய்வுபெறும் போது வெறும் ரூ.1.50 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

தபால் துறை அதிகாரி

பரமசிவம் (தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர்) :- தேனி தபால் கோட்டத்தில் 2 தலைமை தபால் அலுவலகங்கள், 45 துணை தபால் அலுவலகங்கள், 174 கிளை தபால் அலுவலகங்கள் செயல்படுகின்றன. போடி, பெரியகுளம் பகுதியில் தலைமை தபால் அலுவலகங்கள் செயல்படுகின்றன. பெரியகுளம், போடி, தேனி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய தபால் அலுவலகங்களில் பதிவு தபால் அனுப்பும் சேவை மாலை 3 மணி வரை இருந்தது. அந்த சேவை தற்போது இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது மின் அஞ்சல் சேவை, வணிக அஞ்சல், வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை, செல்போன் மூலம் பணப்பரிமாற்றம், என் தபால் தலை, சரக்கு பரிமாற்ற சேவை போன்ற பல்வேறு சேவைகளை தபால் துறை செய்து வருகிறது. தந்தி சேவைக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது தான் மின் அஞ்சல் சேவை. இணையதளம் மற்றும் மின்னஞ்சல் வசதி இல்லாதவர்களுக்கு எளிய வசதியாகவும், குறைந்த கட்டணத்திலும் இந்த சேவை அளிக்கப்படுகிறது. நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்ப இந்த சேவையை பயன்படுத்தலாம். அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் வரையப்பட்ட செய்தி, படங்களை அப்படியே இதன் மூலம் அனுப்பலாம். அவை நண்பர்கள், உறவினர்களால் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும்.

தபால் துறையின் சார்பில் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி செயல்படுகிறது. இதில் சேமிப்பு கணக்கு தொடங்கி, ஏ.டி.எம். கார்டு சேவை, ஆன்லைன் பணப்பரிமாற்றம் வசதிகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த வங்கி சார்பில், தனியார் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.399 பிரீமியம் தொகைக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தபால் அலுவலகங்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. என் தபால் தலை சேவையும் மக்களின் மனம் கவர்ந்த சேவையாக உள்ளது. மக்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய தபால் தலையை பெற்றுக் கொண்டு அதை கடிதங்கள், தபால்கள் அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம். கால மாற்றத்துக்கு ஏற்ப தபால் துறையிலும் புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.

மனநிறைவான பணி

அமுதா (தபால் ஊழியர், தேனி):- இப்போது எல்லாம் உறவினர்கள், நண்பர்களுக்கான கடிதங்கள் வருவது அரிதாகிவிட்டது. வங்கிகளின் அறிவிப்புகள், ஏல நோட்டீஸ், அரசு மற்றும் தனியார் அலுவலக பணி சார்ந்த தபால்கள், வங்கிகளின் ஏ.டி.எம். கார்டு, ஆதார் அட்டை போன்ற தபால்களே அதிக அளவில் வருகின்றன. அன்றாடம் தபால்களை நிலுவை எதுவுமின்றி பட்டுவாடா செய்ய வேண்டும். வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் வேறு வீடுகளுக்கு மாறிச் செல்லும் போது வங்கிகள், அலுவலகங்களுக்கு கொடுத்த முகவரியை பெரும்பாலும் மாற்றுவது இல்லை. இதனால், அவர்களுக்கு வரும் தபால்களை வினியோகம் செய்வதில் சிரமங்களை சந்திக்கிறோம். வீடு மாறிச் செல்பவர்கள் தங்களின் முகவரியை தபால்காரரிடமோ, அருகில் உள்ள தபால் அலுவலகங்களிலோ தெரிவித்தால் கூட புதிய முகவரிக்கு அந்த தபாலை வினியோகம் செய்து வருகிறோம். ஒவ்வொரு தபால் உறைக்குள்ளும் ஒரு தகவல் மறைந்து இருக்கும். அதை சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்க்கும் போது மனநிறைவு கிடைக்கிறது. தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த போதிலும், சிறைவாசிகள் மட்டும் தான் தங்களின் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வாழ்த்துகள் குவியும்

முருகானந்தம் (ஓய்வு பெற்ற தபால் அலுவலர், முல்லைநகர்) :-1980, 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் பண்டிகை நாட்களில் ஓய்வு எடுக்க நேரமின்றி தபால் துறை பணியாளர்கள் மும்முரமாக பணியாற்றினோம். பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து அட்டைகள் மூட்டை, மூட்டையாக குவியும். அவற்றை ஏரியா வாரியாக பிரிக்க தபால் அலுவலகத்தில் இடமின்றி அலுவலக உட்புற, வெளிப்புற வளாகங்களில் அமர்ந்து பிரித்து அடுக்கி வைப்போம். முகவரியை தேடி தேடி வாழ்த்து அட்டைகள் கொடுக்கப்படும்.

செல்போன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது குறைந்து விட்டது. 2000-ம் ஆண்டு கால கட்டத்துக்கு பிறகு வாழ்த்து அட்டைகள் அனுப்புதல், கடித போக்குவரத்து அரிதாகி விட்டது. இன்றைக்கு செல்போனில் கிடைக்கும் வாழ்த்துகள், செல்போன் பழுதானால் அழிந்து விடும். ஆனால், அன்றைக்கு கிடைத்த வாழ்த்து அட்டைகள் பலரின் வீடுகளில் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வார்த்தைகளுக்கு உயிர்

கவிதா (கிராம நிர்வாக அலுவலர், ஆனைமலையான்பட்டி) :- விடுதியில் தங்கி படித்த காலங்களில் எனது அப்பா எனக்கு கடிதங்கள் அனுப்புவார். நானும் பதில் கடிதங்கள் அனுப்புவேன். ராணுவ வீரராக பணியாற்றிய எனது சித்தப்பா காஷ்மீரில் இருந்து கடிதங்களை அனுப்புவார். ஒருமுறை இன்லேண்ட் லெட்டருக்குள் கொஞ்சம் விபூதியை வைத்து ஒட்டி அனுப்பி இருந்தார். அதில் காஷ்மீரில் உள்ள கோவில் பிரசாதம் அனுப்பி உள்ளேன் என்றார். அப்பா அனுப்பும் கடிதங்களில் எல்லாம் அப்பாவின் வாசம் இருக்கும். அவற்றை பொக்கிஷங்களாக சேகரித்து வைப்பேன்.

அன்புள்ள அம்மாவுக்கு... நீங்கள் கொடுத்து அனுப்பிய எள்ளுச்சீடை தீர்ந்து விட்டது. அடுத்தமுறை அப்பாவிடம் கொடுத்து அனுப்பவும் என்று எழுதியது இன்றும் நினைவு இருக்கிறது. இன்றைக்கு கிராம நிர்வாக அலுவலராக அலுவல் ரீதியாக தினமும் ஏராளமான தபால்கள் வருகிறது. ஆனால், உறவினர்கள், நண்பர்களின் கடிதங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. செல்போனில் பல மணி நேரம் பேசினாலும், கடிதங்களில் எழுதும் வார்த்தைகளுக்கு உயிர் இருக்கும்.

ரமாஸ்ரீ (இல்லத்தரசி, அல்லிநகரம்) :- இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களிடம் கடிதம் எழுதும் பழக்கமே இல்லை. ஏதாவது எழுதினால் கூட அது தமிழிலும் இல்லாமல், ஆங்கிலமும் இல்லாமல், தங்கிலீசில் எழுதுகின்றனர். பேசும் போது, அன்புள்ள அப்பா, அன்புள்ள அம்மா என்ற வார்த்தைகளை எல்லாம் யாரும் உச்சரிப்பது இல்லை. ஆனால், கடிதம் எழுதும் போது அன்பு இல்லாமல் கடிதங்கள் நிரம்பாது.

பொங்கல், புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்புவதும், அவர்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் வீடு தேடி வருவதும் மகிழ்ச்சியான நிமிடங்கள். 10 ரூபாய் வாழ்த்து அட்டை என்றபோதிலும், அவை வாழ்வெல்லாம் பசுமை நினைவுகளாக நிலைத்து நிற்கிறது. தபால் துறையில் தற்போது புதிதாக பல மாற்றங்கள் வந்து இருப்பதும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்