செங்கல்சூளை அதிபர் கொலை வழக்கு - வாலிபர் கைது
செங்கல்சூளை அதிபர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சிறையில் அடைப்பு
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் செங்கல்சூளை அதிபர் ஏசுதாசன் (வயது 62). இவரை அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு (எ) அன்பழகன் (29) என்பவர் முன் விரோதத்தில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குத்தி கொலை செய்தார்.
இந்த ெகாலை தொடர்பாக அன்பு (எ) அன்பழகன், ஆரல் கிறிஸ்து நகரை சேர்ந்த விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷன் காம்பவுண்டை சேர்ந்த தங்கஜோஸ் (25) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் 5 தனிப்டைகள் அமைத்தும் தேடுதல் வேட்டை நடந்தது.
தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்ட 4 பேரில் தங்கஜோஸ் நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள மலையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த மலையை 20-க்கும் மேற்பட்ட போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் தங்க ஜோஸ் தப்பி ஓடினார். தொடர்ந்து டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி தங்கஜோசை போலீசார் பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்து பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
இதேபோல் மற்ற 3 பேரும் வெவ்வேறுமலை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதனால் மலை பகுதியில் போலீசார் தேடி வருகிறார்கள்.