ஆஸ்பத்திரிகளுக்கு கவுன்சிலிங் வந்த பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது அம்பலம்-கைதான பெண் புரோக்கர் குறித்து பரபரப்பு தகவல்

சேலத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு கவுன்சிலிங் பெற வந்த பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி அவர்களை பெண் புரோக்கர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது அம்பலமாகி உள்ளது..

Update: 2023-07-29 19:31 GMT

விபசாரம்

சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் விபசாரம் நடப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின்பேரில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 20 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் விபசார புரோக்கராக செயல்பட்ட சேலம் அருகே பூலாவரி ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது 31), ஜாகீர்அம்மாபாளையத்தை சேர்ந்த திவ்யா (36) ஆகியோர் ஜாகீர் அம்மாபாளையம் மற்றும் காசக்காரனூர் பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

கவுன்சிலிங்

புரோக்கர் திவ்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது திவ்யா எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக சேலம் மற்றும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவுக்கு அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்டு ஆஸ்பத்திரிக்கு கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி தனது வலையில் வீழ்த்தி புரோக்கர்கள் மூலம் முக்கிய நபர்களுக்கு அனுப்பி உள்ளார். அதன்படி கவுன்சிலிங்கிற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களை 6 மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதன்மூலம் திவ்யா மற்றும் அவரது கூட்டாளிகள் பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்