ஜிப்மரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.31 லட்சம் மோசடி செய்தவர் கைது :மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாங்கித்தருவதாக 6 பேரிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைவமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-29 18:45 GMT


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 62). இவர் தனக்கு தெரிந்த புதுச்சேரியை சேர்ந்த பிரபாகர் என்பவர் மூலம் புதுச்சேரி தர்மாபுரியை சேர்ந்த முனியப்பன் மகன் மணிகண்டன் (35) என்பவருக்கு அறிமுகமானார்.

அப்போது மணிகண்டன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் நாராயணசாமியிடம் சென்று, தாங்கள் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை செய்து வருவதாகவும் தங்களுக்கு உயர் அதிகாரிகள் நன்கு பழக்கம், எனவே உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் வேலை வாங்கி தருவதாக கூறினர்.

இதை நம்பிய நாராயணசாமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் வைத்து தனது மருமகள் சுகன்யாவிற்கு செவிலியர் வேலைக்காகவும், அசோக், சுரேஷ் ஆகியோருக்கு அட்டெண்டர் வேலைக்காகவும், முத்துராம், கார்த்திகேயன், கவுசல்யா ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் வேலைக்காகவும் என மொத்தம் ரூ.40 லட்சத்தை மணிகண்டன், பிரபாகர், மணிகண்டன் மனைவி மகேஸ்வரி, மணிகண்டனின் தந்தை முனியப்பன், தாய் சாந்தி, தங்கை நித்யா ஆகியோரிடம் கொடுத்தார்.

பணம் மோசடி

பணத்தைப்பெற்ற அவர்கள் 6 பேரும் சேர்ந்து சுகன்யா உள்ளிட்டவர்களுக்கு போலி பணி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை தயாரித்து கொடுத்துள்ளனர். அதனை பெற்ற சுகன்யா உள்ளிட்டோர் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோதுதான், அது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுபற்றி நாராயணசாமியிடம் கூறியுள்ளனர். உடனே அவர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரையும் சந்தித்து, தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டதற்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பிக்கொடுத்துள்ளனர். மீதி பணத்தை ஒரு வாரத்தில் தருவதாக கூறினர். ஆனால் மீதமுள்ள ரூ.31 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் அவர்கள் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

தப்பி செல்ல முயற்சி

இதுகுறித்து நாராயணசாமி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டன், பிரபாகர், மகேஸ்வரி, முனியப்பன், சாந்தி, நித்யா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே இச்சம்பவத்தில் தொடர்புடைய முனியப்பனை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மணிகண்டன், வழுதாவூர் கூட்டுசாலை பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ராஜலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்