மயிலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடநாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்தவர் கைது:வனத்துறையினர் நடவடிக்கை
மயிலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித்திரிந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பிரம்மதேசம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஸ்வர் தலைமையிலான வனத்துறையினர் மயிலம்-கூட்டோிப்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற, நரிக்குறவர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில், மயிலம் ஜே.ஜே. நகரில் உள்ள நரிக்குறவர் பகுதியை சேர்ந்த ஐஸ் மகன் மணி (வயது 54) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கையில் இருந்த பையை வனத்துறையினர் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், 5 நாட்டு வெடிகுண்டுகள், வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் மின்விளக்கு உள்ளிட்டவை இருந்தன.
கைது
இந்த நாட்டு வெடிகுண்டை பொறுத்தவரை, அதில், ஆட்டு இறைச்சியின் கொழுப்பை தடவி வயல்வெளி பகுதியில் வைத்தால், அதை காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட வனவிலங்குகள் கடிக்கும் போது, நாட்டு வெடிகுண்டு வெடித்து அந்த விலங்குகள் இறக்க நேரிடும். இதன் பின்னர், அந்த வனவிலங்கின் இறைச்சியை விற்பனை செய்வதற்காக மணி நாட்டு வெடிகுண்டை வைத்திருந்தது தெரியவந்து. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்து, அவரிடம் இருந்து 5 நாட்டு வெடிகுண்டுகள், மின்விளக்கு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.