சிறுமியை திருமணம் செய்த வாலிபர் 'போக்சோ'வில் கைது
பெரியகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 29). இவர் கடந்த ஆண்டு, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார். பின்னர் அந்த சிறுமியை செல்வக்குமார் திருமணம் செய்துகொண்டார். இதற்கு செல்வகுமாரின் தந்தை முருகன் மற்றும் உறவினர்கள் செல்லம்மாள், மற்றொரு முருகன், முத்தம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே கர்ப்பமான சிறுமி, பிரசவத்திற்காக கடந்த மாதம் 16-ந்தேதி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது தான் திருமண வயதை எட்டாத நிலையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் செல்வக்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும் செல்வக்குமாருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை முருகன், உறவினர்கள் செல்லம்மாள், மற்றொரு முருகன், முத்தம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.