பழைய சூரமங்கலத்தில்நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைதுபோலீசுக்கு பயந்து போதை மறுவாழ்வு மையத்தில் சேர முயன்ற போது சிக்கினார்
ஏற்காடு
பழைய சூரமங்கலத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். அவர், போலீசுக்கு பயந்து போதை மறுவாழ்வு மையத்தில் சேர முயன்ற போது போலீசில் சிக்கினார்.
வாலிபர்
சேலம் மாநகர் குரங்குச்சாவடியில் அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மணிகண்டன் (வயது23). இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்காட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நேற்று காலை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் போதை மறுவாழ்வு மையத்திற்கு மணிகண்டன் வந்தார். அப்போது தான், போதை மறுவாழ்வு மையத்தில் மீண்டும் சேர வேண்டும் என்று கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த நிர்வாகத்தினர், ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கொள்ளை
போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன் சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் உள்ள நகை கடையில் நள்ளிரவு பூட்டை உடைத்து 7 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரத்தை திருடியது தெரிய வந்தது. திருடிய பொருட்களை தன்னுடைய மோட்டார் சைக்களில் மறைத்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
போலீசாருக்கு பயந்து, போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து கொள்வதற்காக வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கொள்ளையடித்த பொருட்களை மீட்டனர். அவர், வேறு எங்கும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.