ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது
சேலம் உடையாப்பட்டியில் நடந்த ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் உடையாப்பட்டியில் நடந்த ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ரவுடி கொலை
சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த வாரம் உடையாப்பட்டியில் வேடியப்பன் கோவில் பகுதியில் ரவுடி ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ரஞ்சித்குமாரை வீட்டில் இருந்து அழைத்து சென்ற தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி, பிரியாணி மணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினரான ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட ரவுடி, அந்த வாலிபரை கண்டித்துள்ளார். அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவுடியை கொலை செய்ய வாலிபர் முடிவு செய்து தனது நண்பர்களை வைத்து கொலை செய்துள்ளார். தற்போது அந்த வாலிபரின் நண்பரான தாதகாப்பட்டியை சேர்ந்த மதன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த ரஞ்சித்குமாரின் மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.