ஏரியூர்:
ஏரியூர் பெரும்பாலை அடுத்த ஆயாமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி என்ற ரேவதி (வயது 28). இவருக்கும் எட்டிக்குழி பகுதியை சேர்ந்த விஜயகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரேவதியின் தந்தை இறந்துவிட்டதால் சொந்த ஊருக்கு வந்த அவர் தனது தாயாருடன் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் திருப்பூர் பெரிச்சிப்பாளையத்தை சேர்ந்த தங்கவேல் மகள் மஞ்சுளாவை விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தங்கவேல் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ரேவதி, விஜயகுமாரிடம் என்னை விட்டு ஏன் மஞ்சுளாவுடன் சென்றாய் என கேட்டபோது அவரை சாதி பெயரை கூறி திட்டியதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பென்னாகரம் அருகே எட்டிக்குழி தோளூர் போராடன் கொட்டாய் பகுதியில் திருப்பூரில் இருந்து மஞ்சுளாவின் தந்தை தங்கவேல், தாய் தெய்வானை, சகோதரர் சுவின் மற்றும் உறவினர்கள் வந்து ரேவதி, அவருடைய தாயாருடன் பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த விஜயகுமார், அவருடைய அண்ணன் கோவிந்தராஜ், புதுப்பட்டியை சேர்ந்த கயலநாதன் என்ற பகவதி ஆகியோர் தங்கவேல், சுவின், ரேவதி உள்ளிட்டவர்களை திட்டினர். இதனை தட்டி கேட்ட தங்கவேல், சுவினை 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ரேவதி பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், கயலநாதன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.