பழனியில் மூதாட்டியிடம் நகை பறித்த சிறுவன் கைது
பழனியில் மூதாட்டியிடம் நகை பறித்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பழனி புதுதாராபுரம் சாலை பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மனைவி சுலோச்சனா (வயது 71). கடந்த 11-ந்தேதி இரவு இவர், புதுதாராபுரம் சாலை பகுதியில் நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலியை பறித்து சென்றனர். பின்னர் சிறிது தூரம் சென்றபோது, திருடர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. அதையடுத்து பொதுமக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான்.
அதைத்தொடர்ந்து மற்றொருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட திருடன் காயம் அடைந்ததால் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். போலீஸ் விசாரணையில், அவன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவனை கைது செய்தனர்.