வடமாநில தொழிலாளியின் 6 மாத குழந்தையை கடத்திய பெண் கைது
ஓசூரில் வடமாநில தொழிலாளியின் 6 மாத குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் போலீசார் குழந்தையை மீட்டனர்.
ஓசூர்:
ஓசூரில் வடமாநில தொழிலாளியின் 6 மாத குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் போலீசார் குழந்தையை மீட்டனர்.
குழந்தை கடத்தல்
உ.பி. மாநிலம் வாரணாசி அருகே பனாரஸ் பகுதியை சேர்ந்தவர் ராம்கேவால். இவரது மனைவி அனிதா., இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராம்கேவால் அனிதா தம்பதியினர் ஓசூர் அருகே உள்ள பேரிகை பகுதியில் இயங்கி வரும் ரோஜா தோட்டத்தில் வேலை செய்வதற்காக தங்கள் சொந்த ஊரிலிருந்து நேற்று முன்தினம் இரவு ஓசூர் வந்தனர். இரவு நேரம் என்பதால் ராம்கேவால் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓசூர் பஸ் நிலையத்தில் படுத்து உறங்கி உள்ளார்.
பின்னர், அதிகாலையில் அவர்களுடன் படுத்து உறங்கிய 6 மாத பெண் குழந்தையை காணவில்லை. இதனால் கணவன்-மனைவி அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை காணாமல் பரிதவித்த அவர்கள், பஸ் நிலையம் முழுவதும் குழந்தையை தேடினர். பின்னர், குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து அவர்கள் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பெண் கைது
மேலும் பஸ் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை ஒரு பெண் கடத்தி சென்றது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து ஓசூர் முழுவதும் போலீசார் பல்வேறு குழுக்களாக கடத்தப்பட்ட பெண் குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் பெண் ஒருவர் குழந்தையை கொண்டு செல்வது தெரிந்து அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த பெண், கர்நாடக மாநிலம் பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த சங்கரா என்பவரது மனைவி ராஜேஸ்வரி (32) என்பதும், அவர் ராம்கேவால் தம்பதியின் 6 மாத பெண் குழந்தையை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். துரிதமாக செயல்பட்டு, 3 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் மற்றும் ஓசூர் டவுன் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் நேரில் பாராட்டினார்.