வடமதுரை அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
வடமதுரை அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை அருகே சிலுவத்தூர் அம்மாபட்டியை சேர்ந்தவர் பாகுராஜா என்ற நீலராஜா (வயது 27). இவருக்கும், திருமலைக்கேணியில் பூக்கடை வைத்திருந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண்ணிடம், தனியார் மில்லில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண், நீலராஜாவுடன் சென்றுள்ளார். ஆனால் நீலராஜா கூறியபடி மில்லுக்கு செல்லாமல், அந்த பெண்ணை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக கூறி அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் நீலராஜாவின் தொந்தரவு தாங்க முடியாத அந்த பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அந்த பெண் வேடசந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வடமதுரை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து, நீலராஜாவை கைது செய்தார்.