கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 27 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
போலீசார் சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக், பான்மசாலா ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர், பர்கூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், பேரிகை, பாகலூர், சூளகிரி, தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்காபறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா-லாட்டரி
இதே போல கஞ்சா விற்றதாக ஓசூர், பாகலூர், சூளகிரி, அஞ்செட்டி பகுதிகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் லாட்டரி விற்ற சிங்காரப்பேட்டை அருகே உள்ள குருகப்பட்டி அப்துல் மஜித் (வயது 36), ராயக்கோட்டை ராஜீவ்காந்தி நகர் மாரியப்பன் (48) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.