சேலம்
சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் கடந்த ஜூன் மாதம் நெத்திமேட்டை சேர்ந்த தினேஷ்குமாரை அணுகி நெய்காரப்பட்டியில் இருக்கும் அவருக்கு சொந்தமான 3.18 ஏக்கர் நிலத்தை ரூ.10 கோடிக்கு விலை பேசியுள்ளார். பின்னர் அந்த நிலத்தை நாமக்கல்லை சேர்ந்த இளங்கோவனுக்கு பேசி முடித்து முன் பணமாக ரூ.33 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த பணத்தை தினேஷ்குமாருக்கு அவர் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, செவ்வாய்பேட்டை பகுதியில் தினேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவரை செந்தில்குமார் வழிமறித்து மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.5,200-ஐ பறித்து சென்றார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தனது கூட்டாளிகளுடன் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார்.