தர்மபுரியில்விவசாயிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது

Update: 2023-07-14 19:45 GMT

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 58). விவசாயி. இவருக்கும் கோபிநாதம்பட்டியைச் சேர்ந்த உறவினரான ராஜேந்திரன் (60) என்பவருக்கும் விவசாய நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் நடந்த உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரமேஷ், ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் வந்தனர். அப்போது சொத்து தொடர்பாக தனியாக பேச வேண்டும் என்று ராஜேந்திரன் அழைத்துள்ளார். இதனால் தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே ரமேஷ் சென்றுள்ளார். அங்கு 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ராஜேந்திரன், அவருடைய மகன்கள் ரஞ்சித் (33), ராமன் (31) ஆகியோர் ரமேசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதில் காயமடைந்த ரமேசை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து ரஞ்சித், ராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்