வேடசந்தூரில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

வேடசந்தூரில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்.

Update: 2023-07-14 21:00 GMT

வேடசந்தூர் ஆத்துமேடு வாய்க்கால்கரை பகுதியில் கோவில் திருவிழாவின்போது ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் பாலமுருகன், ஊர்வலகத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்துமாறு, அவற்றின் உரிமையாளர்களை அறிவுறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல், பாலமுருகன் மீது பட்டாசை கொளுத்தி போட்டு, சரமாரியாக தாக்கினர். அத்துடன் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பாலமுருகன், வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரரை தாக்கியதாக குமரேசன், காட்டுப்பூச்சி என்ற மாரிமுத்து, வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான வடிவேல், ராஜபாண்டி ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேடசந்தூர் ஆத்துமேடு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த வடிவேலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, கைது செய்தனர். இந்த வழக்கில் இன்னும் தலைமறைவாக உள்ள ராஜபாண்டியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்