நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது
நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது
தன்னுடன் இளம்பெண் பேசுவதை நிறுத்தியதால் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண்
தஞ்சையை சேர்ந்த 28 வயது இளம் பெண் ஒருவருக்கும், திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த இளம் பெண் ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அருண்குமார்(வயது 24) என்பவரும் அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
வாலிபருடன் பழக்கம்
அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
அங்கு சில மாதங்கள் இருவரும் கணவன்-மனைவியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நெருக்கமாக இருந்த புகைப்படங்களை...
இதனால் தஞ்சைக்கு வந்த இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் அருண்குமாரிடம் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். அந்த இளம் பெண்ணிடம் பேசுவதற்காக அருண்குமார் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவரால் அந்த பெண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் அந்த இளம் பெண்ணும் தானும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டுள்ளார்.
கைது
இதுகுறித்து அந்த இளம் பெண், தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.