ஓசூரில் சினிமா பாணியில் சம்பவம் காரில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர் கைது 15 கி.மீ விரட்டி சென்று பிடித்த போலீசார்
ஓசூர்:
ஓசூரில் சினிமா பாணியில் காரில் குட்கா கடத்தி சென்ற வடமாநில வாலிபரை 15 கி.மீட்டர் விரட்டி சென்று பிடித்து போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தினர். ஆனால் போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரோந்து வாகன போலீசார் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்றனர். போலீசார் காரை பின் தொடர்ந்து வருவதை கண்ட அந்த நபர் தேசிய நெடுஞ்சாலையில் சப்படி என்ற இடத்தில் சாலையோரமாக காரை நிறுத்தி விட்டு அங்குள்ள ஏரிப்பகுதிக்கு தப்பி ஓட முயன்றார்.
கைது
எனினும் காரை பின்தொடர்ந்து வந்த போலீசார் ஏரிப்பகுதிக்குள் தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் 5 மூட்டைகளில் சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் வடமாநிலத்தை சேர்ந்த ஹனுமான் என்பதும், கர்நாடக மாநிலம் ஜிகினி பகுதியில் இருந்து கோவைக்கு குட்கா கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஹனுமானை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கார், 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் காரில் குட்கா கடத்த முயன்றவரை போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.