பழிதீர்க்க சதிதிட்டம் தீட்டிய 5 பேர் கைது
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்ப்பதற்காக சதிதிட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்ப்பதற்காக சதிதிட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சதி தி்ட்டம்
ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அசோக்குமார் என்பவரை ரவுடி கொக்கி குமார் என்பவர் கத்தியால் வெட்டினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் ராமநாதபுரம் பகுதியில் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். மேற்கண்ட சம்பவத்திற்கு தொடர்ச்சியாக பழிக்குபழி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு நெருக்கமானவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராமநாதபுரம் சிவஞானபுரம் ரெயில்வே டிராக் அருகே சென்றபோது அந்த பகுதியில் சிலர் அமர்ந்து சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சிவஞானபுரம் மணிகண்டன் என்ற சியான்மணி (வயது 24), ரஞ்சித் (19), சக்கரக்கோட்டை சிலம்பரசன் (23) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் என தெரியவந்தது. மேலும் இவர்கள் ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்க பயங்கர ஆயுதங்களுடன் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்தது.
5 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாள் மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
கைதான மணிகண்டன் என்ற சியான்மணி, சிலம்பரசன், ரஞ்சித் ஆகியோர் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவர்கள் இருவரும் மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
கோர்ட்டு வளாகத்தில் வாலிபர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்க சதிதிட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.