ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி அருகே உள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (வயது 45), பெயிண்டர். இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சின்னையா மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்ல முயற்சி செய்வதை பார்த்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற இருவரையும் பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட முகளூர் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (23) அச்.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முபாரக் பாஷா (22) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.