போலீஸ் நிலைய வாசலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
போலீஸ் நிலைய வாசலில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
தேவகோட்டை
தேவகோட்டையில் கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழா முடிந்து நேற்று மதியம் கோவிலில் விழா கமிட்டியினர் வரவு, செலவு கணக்கு பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு தரப்பினர் நந்து என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினராம். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் நந்து புகார் செய்ய வந்தார். அவருடன் வீரமுத்து (45) என்பவரும் வந்திருந்தார். அப்போது மற்றொரு தரப்பை சேர்ந்த தமிழரசன் (22) என்பவரும் அங்கு வந்தார். தமிழரசனை பார்த்தவுடன் வீரமுத்து ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். அப்போது அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வீரமுத்து, நந்துவை போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலைய வாசலிலேயே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.