பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒரு முதியவர் வீடு, வீடாக சென்று நோய் பாதித்த பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் வீரமணி விசாரித்து நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் அந்த முதியவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து மருந்து, மாத்திரைகள் வழங்கியது தெரியவந்தது.
கைது
இதனை தொடர்ந்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த அய்யாவு (வயது 72) என்பதும், 20 ஆண்டுகளுக்கு முன்பு மெடிக்கல்லில் வேலை பார்த்ததும் தெரியவந்தது. மேலும் இவர் முதியவர்களுக்கு வீடு தேடி சென்று மருந்து கொடுப்பதும், ஊசி போடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பள்ளிபாளையம் அரசு தலைமை டாக்டர் வீரமணி பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் அய்யாவுவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.