சேலம் புதிய பஸ்நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் திருட முயற்சி-2 பேர் கைது
சேலம் புதிய பஸ்நிலையத்தில் வாலிபரிடம் செல்போன் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மெய்யனூர் வன்னியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). இவர், உணவு பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை புதிய பஸ் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். பின்னர் ரஞ்சித்குமார் அங்கேயே அமர்ந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த 2 பேர் தூங்கி கொண்டிருந்த அவரிடம் செல்போனை திருட முயற்சி செய்தனர். இதையடுத்து திடீரென கண் விழித்து எழுந்த ரஞ்சித்குமார், சத்தம் போட்டு கூச்சலிட்டார். பிறகு செல்போனை திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் சேலம் பொன்னம்மாபேட்டை திப்புநகர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (32), டவுன் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.