கவர்னருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டம்; தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 11 பேர் கைது

கவர்னருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-16 20:23 GMT

கவர்னருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாம்பல் அனுப்பும் போராட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில், ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் சாம்பல்களை தமிழக கவர்னருக்கு தபால் மூலம் அனுப்பும் போராட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது.

11 பேர் கைது

அதன்படி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில் அவர்கள், ஆன்லைன் ரம்மி விளையாட்டை கண்டித்தும், அதை தடை செய்யக்கோரியும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இறந்தவர்களின் சாம்பல்களை ஒரு தபால் கவரில் போட்டு அதனை தபால் மூலம் அனுப்புவதற்காக அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த புதுமண தம்பதி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்