பட்டதாரி பெண்ணை 2-வது திருமணம் செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது

பட்டதாரி பெண்ணை 2-வது திருமணம் செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-14 22:20 GMT

பனமரத்துப்பட்டி:

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் விஜயகுமார் (வயது 31). பட்டதாரியான இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய திருமணம் ஆகாத பட்டதாரி பெண் ஒருவருடன் விஜயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிைடயே கடந்த 4-ந் தேதி விஜயகுமார் தனது மனைவியிடம் நான் பாதயாத்திரையாக பழனி மலைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிறகு தான் காதலித்து வந்த பட்டதாரி பெண்ணை அழைத்துக் கொண்டு புதுச்சத்திரம் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் தான் 2-வது திருமணம் செய்த பட்டதாரி பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்து முதல் மனைவி தமிழ்செல்வியிடம், நான் இந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வி ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்