பாலக்கோட்டில், சாலை பணியாளரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேர் கைது

Update: 2023-02-07 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோட்டில் சாலை பணியாளரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

சாலை பணியாளர்

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 42). இவர் பாலக்கோடு பகுதியில் சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து கடன் பெற எண்ணினார். இதுகுறித்து அவர் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகரிடம் (48) தெரிவித்தார்.

அப்போது சந்திரசேகர், கடன் பெறுவதற்கு சான்று அளிக்க தனக்கு ரூ.4 ஆயிரம் தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் குப்புசாமி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. மேலும் அவர் இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

ரூ.4 ஆயிரம் லஞ்சம்

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சந்திரசேகரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரத்தை குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மதியம் அந்த தொகையுடன் அவர், பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியபடி, ரூ.4 ஆயிரத்தை இளநிலை உதவியாளர் தனபால் (40) என்பவரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முகுந்தன் மற்றும் போலீசார் தனபாலை கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடம் விசாரித்தனர்.

அதிகாரி உள்பட 2 பேர் கைது

அப்போது அவர், கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியதன் பேரில், குப்புசாமியிடம் லஞ்சம் பெற்றதாக தெரிவித்தார். இதையடுத்து சந்திரசேகர் மற்றும் தனபால் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதையடுத்து சந்திரசேகர் மற்றும் தனபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சாலை பணியாளரிடம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி உள்பட 2 பேர் போலீசில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்