சினிமா துணை இயக்குனரை கடத்திய வழக்கில் ஒருவர் கைது

பல்லடத்தில், சொத்துக்காக சினிமா துணை இயக்குனரை கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-30 17:40 GMT

பல்லடத்தில், சொத்துக்காக சினிமா துணை இயக்குனரை கடத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சினிமா துணை இயக்குனர்

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் வசிக்கும் பொன்னுச்சாமி என்பவரது மகன் சிவக்குமார் என்கிற தங்கதுரை (வயது 52). இவர் சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிவதாக கூறப்படுகிறது. தங்கதுரையின் தங்கை அம்பிகா பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசிக்கிறார். இவரது கணவர் வேலுச்சாமி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில், தங்கதுரையின் பூர்வீக சொத்தை தங்களுக்குத்தரும்படி அம்பிகா குடும்பத்தினர் கேட்டு வந்ததுடன், சம்பவத்தன்று தங்கதுரையை கடத்திச்சென்று, அடித்து மிரட்டி, கையெழுத்து பெற்றுக்கொண்டு நகை, பணம், சொத்துக்களை அபகரித்துவிட்டு அவரை பெங்களூருவில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் உறவினர்கள் உதவியால் தப்பி வந்த தங்கதுரை இது தொடர்பாக பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

பா.ஜ.க. பிரமுகர் கைது

இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், வேலுச்சாமியின் மகனும் நகர பா.ஜ.க. விவசாய அணி செயலாளருமான கோகுல கண்ணன் (25) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக உறவினர் வேலுசாமி மற்றும் உடந்தையாக இந்த அஸ்ரப்அலி (30), ரியாஸ்கான் (29), சாகுல்அமீது (35) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்