சேலத்தில் ஜவுளி கடையில் பணம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது-பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலம்
சேலத்தில் ஜவுளி கடையில் பணம் திருடிய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கும்பலாக பல்வேறு கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
ஜவுளிக்கடையில் திருட்டு
சேலம் பழைய பஸ்நிலையம் அருகே அருணாசல ஆசாரி தெருவில் கார்த்திகேயன் (வயது 37) என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த ஜவுளிக்கடையில் கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் திருட்டு போனது. கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, கடையின் ஊழியர்கள் சிலர் வேறு சாவியை கொண்டு கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கு கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் கார்த்திகேயன், சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
பல்வேறு கடைகளில் கைவரிசை
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஜவுளிக்கடை ஊழியர்களான பொன்னம்மாப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் (20), இர்பான் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய பீட்டர், ஸ்ரீகாந்த், தமிழ்ச்செல்வன், சதீஷ்குமார் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில், இவர்கள் கார்த்திக்கேயன் ஜவுளிக்கடையில் மட்டும் அல்லாமல் அருகில் உள்ள கடைகளின் ஊழியர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பல லட்சம் ரூபாய் வரை திருடி கைவரிசை காட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.