நாமக்கல் அருகே வாகன சோதனையில்300 கிலோ குட்கா பறிமுதல்ராஜஸ்தானை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது

Update: 2023-01-25 18:45 GMT

நாமக்கல் அருகே வாகனசோதனையில் 300 கிலோ குட்கா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் ராஜஸ்தானை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்தனர்.

வாகன சோதனை

பெங்களூருவில் இருந்து நாமக்கல் வழியாக கும்பகோணத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை காரில் கடத்தப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை நாமக்கல்- திருச்சி சாலையில் நல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற குஜராத் மாநில பதிவெண் கொண்ட காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

குட்கா பறிமுதல்

இந்த சோதனையின்போது காரில் மூட்டை, மூட்டையாக குட்கா கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 25 மூட்டைகளில் இருந்த சுமார் 300 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த பூபேந்திரசிங் (வயது 24), பிரேமாராம் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் காரின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாமக்கல் அருகே இதேபோல் காரில் கடத்தி வரப்பட்ட 252 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்