திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் 3-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் 3-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வழிப்பறி
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரை சேர்ந்தவர் விஜி (வயது 36). இவர், கடந்த 6-ந் தேதி லைன்மேடு வடக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கசெயின் மற்றும் ரூ.4,300-ஐ வழிப்பறி செய்தார்.
இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக விஜி மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்திலும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திலும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
3-வது முறையாக குண்டர் சட்டம்
இந்த வழக்குகளில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் விஜி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தொடர்ந்து திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் விஜி ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், நேற்று விஜியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டார்.
இதன்மூலம் அவர் 3-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.