அரூர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2022-12-20 18:45 GMT

அரூர்:

அரூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓட முயற்சி

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரூர் போலீசார் பாளையம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலை ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். இதனால் போலீசார் அவரை துரத்தி பிடித்தனர்.

விசாரணையில் அவர் பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி பிரியா (வயது 39) என்பது தெரியவந்தது. அவர் கையில் வைத்திருந்த பையை வாங்கி, போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் 1,100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை அதில் வைத்திருப்பது தெரிய வந்தது.

பெண் கைது

விசாரணையில் அவர் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது உறுதியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரூர் போலீசார், பிரியாவை கைது செய்தனர். அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ஒரு துணிக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த சிவகுமார் (41) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்த 1,200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்