மாரண்டஅள்ளி அருகே கஞ்சா விற்ற தாய், மகன் கைது

Update: 2022-12-16 18:45 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்பனை செய்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தணிகாசலம், பெண் போலீசார் முனியம்மாள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் ஒரு பெண்ணும், வாலிபரும் கையில் மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து, அவர்கள் வைத்திருந்த 2 மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

தாய், மகன் கைது

அப்போது அதில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்களாக கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், மாரண்டஅள்ளி புதுத்தெருவை சேர்ந்த சகுந்தலா (வயது 48), இவருடைய மகன் சீனிவாசன் (20) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகனை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்