ஓசூரில் கடையின் ஷட்டரை உடைத்து செல்போன்கள் திருடியவர் கைது
ஓசூரில் கடையின் ஷட்டரை உடைத்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
செல்போன் கடை
ஓசூர் ஜாபர் தெருவை சேர்ந்தவர் ஜாபர் உசேன் (வயது 29). இவர் தாலுகா அலுவலக சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த 29-ந் தேதி வழக்கம் போல கடையை திறந்த அவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடைக்குள் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 6 செல்போன்கள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து ஜாபர் உசேன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
வாலிபர் கைது
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் விசாரணையில், செல்போன்களை திருடியது ஓசூர் சானசந்திரம் சீதாராம் நகரை சேர்ந்த ஆரீப் என்ற அப்பு (20) என தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டன.