அரூர் கோட்டத்தில் கடந்த மாதம் மது விற்ற வழக்கில் 111 பேர் கைது

Update: 2022-12-01 18:45 GMT

அரூர்:

அரூர் கோட்டத்தில் கடந்த மாதம் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக 111 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுபாட்டில்கள் விற்பனை

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமலவள்ளி தலைமையிலான போலீசார் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

111 பேர் கைது

இந்தநிலையில் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட மொரப்பூர், கம்பைநல்லூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், கடத்தூர், அரூர் ஆகிய பகுதிகளில் சென்ற மாதம் சாராயம் மற்றும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது, ஓட்டல்களில் மது குடிக்க அனுமதித்தது உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 111 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 27 பேர் பெண்கள் ஆவர்.

கைதானவர்களிடம் இருந்து 2,570 மதுபாட்டில்கள், 45 லிட்டர் சாராயம், 50 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்