கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் முயற்சி; பெண்கள் உள்பட 23 பேர் கைது

4 வழிச்சாலைக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் செய்ய முயன்ற பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-30 18:45 GMT

திருப்புவனம், 

4 வழிச்சாலைக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் செய்ய முயன்ற பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

நான்கு வழிச்சாலை

மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக மதுரை-பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்க 2011-12-ல் நிலம் கையகப்படுத்தும்பணி நடைபெற்றது. இதற்காக திருப்புவனம், லாடனேந்தல், இந்திரா நகர், திருப்பாச்சேத்தி மற்றும் பல கிராமங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையில் நிலங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால் உயர்த்தப்பட்ட மதிப்பிற்கு ஏற்ப கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்திரவாதத்தை செயல்படுத்தவும், நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்து நஷ்டம் அடைந்த தங்களுக்கு சரியான இழப்பீட்டை உடனே வழங்க வலியுறுத்தியும், திருப்புவனம் முதல் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வரை லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, படமாத்தூர் வழியாக நடைபயணம் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

23 பேர் கைது

இதற்காக நேற்று திருப்புவனம் சந்தைதிடலில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் திரவியம்பிள்ளை தலைமையிலும், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலையிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் பதாகைகளுடன் விவசாயிகள் கூடினார்கள். ஒருங்கிணைப்பாளர் முருகப்பா நடைபயணம் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம்-தேசிய நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி நடை பயணம் செல்ல முயன்றனர். அப்போது நடைபயணத்திற்கு அனுமதி இல்லை என கூறி திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் மற்றும் போலீசார் நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பு விவசாயிகளான 2 பெண்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர். முன்னதாக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் சந்தை திடல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்