தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 59). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி டேக்கீஸ்பேட்டையை சேர்ந்த புரோக்கர் ஆயூப்பாஷா மூலம் தர்மபுரி அடுத்த குப்பூரை சேர்ந்த காளியப்பனுக்கு சொந்தமான லாரியை ரூ.8 லட்சத்துக்கு வாங்கினார். இந்த லாரி கர்நாடக மாநில பதிவு எண்ணில் இருந்ததால் இதை தர்மபுரி பதிவு எண்ணில் மாற்ற, லாரியை கந்தசாமி நேற்று முன்தினம் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நிறுத்தினார்.
அப்போது அங்கு லாரியின் ஆவணங்களுடன் வந்திருந்த காளியப்பன், அவரது நண்பர் சிவப்பிரகாசம், புரோக்கர் ஆயூப்பாஷா லாரி அருகே இருந்துள்ளனர். பின்னர் கந்தசாமி அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது லாரியுடன் காளியப்பன் உள்ளிட்ட 3 பேரும் மாயமானதை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கந்தசாமி கொடுத்த புகாரின்பேரில் லாரியை திருடி சென்ற காளியப்பன் (41), சிவப்பிரகாசம் (45), ஆயூப்பாஷா (50) ஆகியோரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் லாரி பறிமுதல் செய்தனர்.