பள்ளிக்கு சென்றபோது மயங்கி விழுந்த பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி-2 வாலிபர்கள் போக்சோவில் கைது
பென்னாகரம்:
பள்ளிக்கு சென்றபோது மயங்கி விழுந்த பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பலாத்கார முயற்சி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் இண்டூர் அருகே தனது உறவினர் வீட்டில் தங்கி, இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் பள்ளிக்கு தினமும் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.
அதேபோல் சம்பவத்தன்று மாணவி தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இண்டூர் பஸ் நிறுத்தத்தை தாண்டி சென்றபோது, திடீரென அவர் சாலையில் மயங்கிவிழுந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற பழைய இண்டூரை சேர்ந்த செல்வன் மகன் சவுகத் (வயது 20), மனோகரன் மகன் குமரேசன் (20) ஆகியோர் தண்ணீரை மாணவியின் முகத்தில் தெளித்தனர். ஆனால் மாணவி எழுந்திருக்கவில்லை. இதனால் அவர்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
அப்போது அந்த வழியாக மாணவியின் உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் இந்த சம்பவத்தை பார்த்து சத்தம் போட்டார். உடனே சவுகத் மற்றும் குமரேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து மாணவி சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து இண்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போலீசார் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
வாலிபர்கள் கைது
விசாரணையில் உதவி செய்வதுபோல் நடித்து, தன்னை 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக மாணவி தெரிவித்தார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சவுகத் மற்றும் குமரேசனை கைதுசெய்தனர்.
பள்ளி சென்றபோது மயங்கி விழுந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.